பள்ளத்தில் விழுந்த காட்டெருமை மீட்பு

கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு கிராமத்தில் விவசாயத்திற்கு நீர் சேமிப்பதற்காக அமைக்கப்பட்ட 10 அடி பள்ளத்தில் விழுந்து வெளியே வர முடியாமல் தவித்த காட்டெருமையை இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கறம்பக்குடி தீயணைப்புத் துறையினரும் வனத்துறையினரும் ஜேசிபி இயந்திர உதவியுடன் மீட்டனர்.

Update: 2024-02-04 05:00 GMT

 புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இரண்டு காட்டெருமைகள் சுற்றி திரிந்து வருவதாகவும் வனப்பகுதியில் இருக்கக்கூடிய காட்டெருமைகள் விவசாய நிலங்களில் சுற்றி திரிவதை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்து வந்த நிலையில் அந்த காட்டெருமைகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சூரக்காடு கிராமத்தில் உள்ள திருநாவுக்கரசு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயத்திற்கு நீரை சேமித்து நீர் இறைப்பதற்காக அமைக்கப்பட்ட சுமார் 10 அடி பள்ளத்தில் ஒரு காட்டெருமை விழுந்த நிலையில் மற்றொரு காட்டெருமை அங்கிருந்து சென்றுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளத்தில் விழுந்த காட்டெருமை அதிலிருந்து வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற கறம்பக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஜேசிபி இயந்திர உதவியோடு பத்தடி பள்ளத்தின் கரைகளை காட்டெருமை செல்வதற்கு ஏதுவாக அமைத்து அதன் மூலம் காட்டெருமையை மீட்ட நிலையில் வெளியே வந்த காட்டெருமை சிட்டாக ஓடியது. மேலும் வனப் பகுதியில் இருக்கக்கூடிய இரண்டு காட்டெருமைகள் அப்பகுதியில் சுற்றித் திரிவதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சத்துடன் இருக்கக்கூடிய நிலை தொடர்ந்து வருவதாகவும் அதனால் வனத்துறையினர் இரண்டு காட்டெருமைகளையும் பிடித்து வனப் பகுதியில் கொண்டு சென்று விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News