அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு தாய்வீட்டு சீர் வழங்கிய வருவாய் துறையினர்
அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு, ஸ்ரீபெரும்புதுார் வருவாய் துறை சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
Update: 2024-03-11 11:47 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில், 100 ஆண்டு பழமையான அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு, சிவராத்திரியை முன்னிட்டு, ஆண்டுதோறும் மயானப் பிரவேசம் மஹோற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 7ம் தேதி துவங்கிய நடப்பாண்டு விழா மார்ச் 16 அன்று நிறைவடைய உள்ளது. இந்நிலையில் விழாவின் மூன்றாம் நாளான நேற்று அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஸ்ரீபெரும்புதுார் வருவாய் துறை சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: இக்கோவிலுக்கு, ஒவ்வோர் ஆண்டு மயானப் பிரவேசம் மஹோற்சவம் நிகழ்ச்சிக்காக வருவாய்த் துறை சார்பில், தாய் வீட்டு சீதனம் என்ற பெயரில் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கும் நடைமுறை பன்னெடுங்காலமாக தொடர்கிறது. அதன்படி நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான நேற்று கோட்டாட்சியர் சரவண கண்ணன், வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் இணைந்து, சீர்வரிசை அடங்கிய பொருட்களை வழங்கினர். இன்று, ஞாயிற்றுக்கிழமை, காலை 7.00 மணிக்கு அம்மன் கவச ஊர்வலத்தை தொடர்ந்து, பலி சாத்துதல், அக்னி சட்டி ஊர்வலம் முடிந்து, பிற்பகல் 2.00 மணிக்கு மயானக் கொள்ளை விழா நடைபெற உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.