மயிலாடுதுறை மாவட்டத்தில் 7 இடங்களில் வருவாய் ஊழியர்கள் போராட்டம்

மயிலாடுதுறையில் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2024-02-23 06:34 GMT

மயிலாடுதுறையில் பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் அனைத்துப் பணிகளையும் புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், இளநிலை, முதுநிலை பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதிதிருத்த ஆணையை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் அனைத்து பணிகளையும் புறக்கணித்து, அலுவலக வாசலில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில் இளவரசன் முன்னிலையில் இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம், தரங்கம்பாடி குத்தாலம் ஆகிய தாலுக்கா அலுவலகங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வருவாய் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வருவாய் அலுவல் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பட்டா மாறுதல், சான்றுகள் பெற வருவாய் அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு வராததால் தேர்தல் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News