மூலப்புதூரில் சீரான குடிநீர் விநியோகிக்க கோரி சாலை மறியல்
Update: 2023-12-04 06:29 GMT
கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே மூலப்புதூரில் சீரான குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள சாலை மறியலில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி அருகே மூலப்புதூரில் எட்டு வார்டுகள் உள்ளன. இதில், 2 ஆவது வார்டு போயர் தெருவில் 150 குடும்பங்கள் உள்ளன. மற்ற வார்டுகளுக்கு சீராக குடிநீர் விநியோக்கப்பட்டு வரும் நிலையில், 2 வது வார்டுக்கான குடிநீர்க் குழாய் பழுதானதால், போயர் தெருவிற்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் காலை காலிக் குடங்களுடன் தம்மம்பட்டி- கெங்கவல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால் தம்மம்பட்டியிலிருந்து பெரம்பலூர், ஆத்தூர், கள்ளக்குறிச்சி வழியே செல்லும் அனைத்து பேருந்துகளும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதாகப் புறப்பட்டது.