சாலை விரிவாக்கப் பணி - அச்சத்தில் பொதுமக்கள் தர்ணா

மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணியின் போது வீடுகள் அகற்றப்படும் என்ற அச்சத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார்.

Update: 2024-02-28 04:22 GMT

எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. மூங்கில்துறைப்பட்டில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர் மட்டப் பாலம் கட்டுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையை விரிவுபடுத்தி சாலை நேராகச் செல்ல கடந்த 4 நாட்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் அளவீடு செய்தனர்.இதனால் அண்ணாநகர் பகுதியில் உள்ள பல வீடுகள் இடிக்க நேரிடும் என பொதுமக்கள் கடந்த 23ம் தேதி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சமாதானமாகி சென்றனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் அப்பகுதியில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சாலை விரிவாக்கப் பணியின் போது இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் பாதிப்படையாத வகையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சாலை அமைக்கும் போது சேதம் ஏற்படும் வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கி அவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News