மிளகு வியாபாரியிடம் வழிப்பறி - 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

சேலம் பனைமரத்துப்பட்டி அருகே கேரள மிளகு வியாபாரியை தாக்கி ரூ.24.40 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த புரோக்கர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;

Update: 2024-02-16 02:16 GMT

வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் 

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடகோட்டத்துறை பகுதியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 33). இவர் ஏற்காடு, கொல்லிமலை உள்பட மலைப்பகுதிகளில் மிளகு வாங்கி சென்று வியாபாரம் செய்து வந்தார். அவர் மிளகு வாங்குவதற்கு ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்த சண்முகம் (39) என்பவர் புரோக்கராக செயல்பட்டார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி வீராசாமி மிளகு வாங்குவதற்காக ரூ.24 லட்சத்து 40 ஆயிரத்துடன் சேலம் வந்தார். இதையடுத்து அவரை சண்முகம் சரக்கு வேனில் மிளகு வாங்குவதற்காக கொல்லிமலைக்கு அழைத்து சென்றார்.

Advertisement

அங்கு மிளகு புரோக்கர்களை பார்க்க முடியாததால் வாங்க முடியவில்லை. இதனால் அன்று இரவு அவர்கள் ஏற்காட்டில் தங்கினர். மறுநாள் இரவில் வீராசாமியை, சண்முகம் பனமரத்துப்பட்டியில் உள்ள மிளகு புரோக்கரை பார்ப்பதற்கு சரக்கு வேனில் அழைத்து சென்றார். பனமரத்துப்பட்டி ஏரிக்கரை அருகே சென்ற போது சண்முகம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியதால் வாகனம் ஓரமாக நிறுத்தப்பட்டது. அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை.

இந்த நேரத்தில் அங்கு வேனில் வந்த ஒரு கும்பல் திடீரென வீராசாமியை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த ரூ.24 லட்சத்து 40 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு சென்றது. இதுகுறித்து அவர் பனமரத்துப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வீராசாமியிடம் பணம் பறித்தது தொடர்பாக புரோக்கர் சண்முகம், வெள்ளக்கடையை சேர்ந்த பாஸ்கர் (35), கிளியூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. இதில் வீராசாமியை தாக்கி பணம் பறித்த குற்றத்திற்காக சண்முகம், பாஸ்கர், கார்த்திக் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜரானார்.

Tags:    

Similar News