திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் அத்துமீறிய காதல் ஜோடி
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் அத்துமீறிய காதல் ஜோடியை பேரூராட்சி பணியாளர்கள் அகற்றினர்.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தையில் காமராஜர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தினந்தோறும் சென்னை, பெங்களூர் உட்பட பல்வேறு பெருநகரங்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஏராளமான அரசு பஸ்கள் இயங்கி வருகிறது.
இதனால் இரவு பகல் என்று எப்போதுமே இந்த பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதற்கிடையே பஸ் நிலையத்தில் காதலர்கள் அத்துமீறும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அத்துமீறிய நிலையில் தற்போது காதலர்கள் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நேற்று இந்த பஸ் நிலையத்தில் டீன் ஏஜ் காதல் ஜோடி ஒன்று காலையில் பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள பயணிகள் அமருமிடத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தனர். சிறிது நேரம் ஜாலியாக பேசிய ஜோடி அவ்வப்போது அத்து மீறல்களிலும் ஈடுபட்டது. இதை பார்த்த பயணிகள் சிலர் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
யாரையும் பற்றி கவலைப்படாமல் மதியம் வரை அந்த இளம் காதல் ஜோடி அத்துமீறல்கள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக அங்குள்ள வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடம் வந்த பேரூராட்சி பணியாளர் அந்த ஜோடியை கடுமையாக எச்சரித்தார்.
உடனே அந்த ஜோடி பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதால் நைசாக அங்கிருந்து நடையை கட்டி விட்டனர். இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் கூறுகையில் திங்கள் சந்தை பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் ஒன்று இருக்கிறது. இருந்தாலும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை. எனவே 24 மணி நேரம் இயங்குகின்ற வகையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.