புதிதாக கட்டிய பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது!!

புதிதாக கட்டிய பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2024-07-07 09:50 GMT

காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு என 3 கட்டிடங்கள் கட்டப்பட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தான் இந்தக் கட்டிடம் பயன் பாட்டுக்கு வந்தது. சுமார் 90 மாணவ-மாணவிகள் படிக்கின்ற இந்த நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடத்தில் 7-ம் வகுப்பு வகுப்பறையில் மேலே உள்ள மேற்கூரை சுவர் திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதனால் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கை வளைந்தது. வகுப்பறையின் மேற் கூரை சுவர் இடிந்து விழுவதற்கு முன்னதாக அனைத்து மாணவ-மாணவிகளும் வகுப்பறைகளை விட்டு இறைவணக்கம் பாடுவதற்காக மைதானத்தில் ஒன்று கூடி இருந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டிடத்தை ஒப்பந்ததாரர், தரமற்ற எம் சாண்ட் மற்றும் கற்களை வைத்து கட்டி இருப்பதால் அது இடிந்து விழுந்துள்ளது தெரிய வந்தது. மேலும் வகுப்பறையில் உள்ள அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றிலும் இப்போதே கீறல் விழுந்துள்ளது. 

Tags:    

Similar News