கயிறு கைவினைப் பொருட்கள் பயிற்சி - டிச.20 க்குள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் கயிறு கைவினைப் பயிற்சி பெற டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இம்மைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையத்தில் கயிறு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏழு மாத கால கயிறு கைவினைப் பயிற்சி வகுப்பில் 18 முதல் 50 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், உள் பயிற்சி 6 மாதங்களும், களப்பயிற்சி ஒரு மாதமும் வழங்கப்படும். இப்பயிற்சிக்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
பயிற்சியின் போது மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி உண்டு. இப் பயிற்சி 2024, ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை இந்த அலுவலக வேலை நாள்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, அலுவலக பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி, தஞ்சாவூர் - 613403 என்ற முகவரிக்கு டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362 - 264655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.