அமைச்சர் எ.வ வேலு வீட்டில் இருந்து ரூ.10 கோடி ரொக்கம் பறிமுதல்
அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும் அவரோடு தொடர்புள்ள இடங்களிலும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையின்போது பத்து கோடி ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது என ஏஷியாநெட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு நாள்களாக இந்த சோதனை நீடித்தது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தரப்பில் கூறப்படும் நிலையில், சோதனை நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மொத்தம் ஐம்பது இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது பத்து கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், வங்கிப் பணப் பறிமாற்றம், சொத்து ஆவணங்கள், மின்னலக்கத் தரவுகள் ஆகியவற்றுடன் தங்க நகைகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக ஊடகச் செய்தி கூறுகிறது. எனினும், அமைச்சர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இன்று மாலை வரை அது நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் குறித்து வருமானவரித்துறை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.