8 மாதத்தில் ரூ.67 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - அதிகாரி தகவல்
Update: 2023-11-29 04:55 GMT
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மளிகை கடை, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக போலீசாருடன் இணைந்து பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர். இதுகுறித்து நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:- இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை கடந்த 8 மாதங்களில் 4 ஆயிரத்து 16 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் 100-க்கு மேற்பட்ட கடைகளில் இருந்து ரூ.67 லட்சத்து 83 ஆயிரத்து 444 மதிப்பிலான 4 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.என்றார்