கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. ஆட்சியர் அறிவிப்பு. நாடாளுமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையர்கள் இன்று டெல்லியில் அறிவிப்பு செய்தனர். இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுல் படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையர்கள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
இதன் அடிப்படையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை, அரசியல் கட்சியினரும், பொது மக்களும், வாக்காளர்களும் ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும், கரூர் மாவட்டத்தில் பறக்கும் படை 12 குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழு 12 குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழு 4 குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, கரூர் மாவட்டத்தில்,
வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுப்பதை தவிர்க்கும் பொருட்டு 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை 24 மணி நேரமும் 1800 425 5016- என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், இதற்காக கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்ற உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.