சபரிமலை தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது - ஜெயச்சந்திரன்
சபரிமலையில் பக்தர்களின் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என அய்யப்ப சேவா சமாஜத்தின் வட தமிழக தலைவர் ஜெயச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் வட தமிழக தலைவரும், சிப்காட் நவசபரி அய்யப்பன் கோவில் குருசாமியுமான ஜெயச்சந்திரன், பொதுச் செயலாளர் ஈரோடு ஜெயராம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவிதாங்கூர் தேவசம் போர்டு வருகிற மண்டல காலத்தில் இருந்து சபரிமலைக்கு வருகிற பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பேர் மட்டுமே முன் கூட்டி பதிவு செய்யும் முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தனர். மற்றவர்கள் சபரிமலைக்கு செல்ல முடியாது என்று உத்தரவிடுவதற்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது தான் தேவசம் போர்டின் பணி. சபரிமலைக்கு வரும் பக்தர்களை தடுத்து நிறுத்தும் மனப்பான்மையை கைவிட்டு விட்டு, பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் பணியில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முனைப்பு காட்ட வேண்டும். எருமேலி, நிலக்கல், பம்பா போன்ற பகுதியில் உடனடி தரிசன அனுமதி நிறுத்திவிடுவோம் என்பது அய்யப்ப பக்தர்களுக்கு விடப்பட்ட சவாலாக உள்ளது. இதனை அய்யப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்து முறியடிப்போம். பம்பையிலோ, மலையேற்றத்திலோ அய்யப்ப பக்தர்களை மணிக்கணக்கில் தடுத்து நிறுத்தி அவதிக்குள்ளாக்கும் நிலை அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.
பாத யாத்திரையாக சொந்த ஊர்களிலிருந்தும், பெருவழி பாதை வழியாகவும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கரிமலை உச்சியில் சிறப்பு அனுமதி சீட்டு வழங்கி அவர்களை நேரடியாக பதினெட்டாம்படி ஏறி தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முடிவில் இருந்து திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு பின்வாங்க வேண்டும். இல்லையெனில் அய்யப்ப பக்தர்களை திரட்டி அறநெறி வழியிலான போராட்டங்களில் சபரிமலை அய்யப்பசேவா சமாஜம் ஈடுபடும் என அதில் கூறப்பட்டுள்ளது.