பாதுகாப்பு ஒத்திகை
சேலம், கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.
சேலம் கருப்பூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சேலம் மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு சார்பில் வெடிகுண்டு செயல் இழப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த செயல் இழப்பு ஒத்திகை முகாமிற்கு கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை முதன்மை மேலாளர் சிவராமகிருஷ்ணன் , தலைமை தாங்கினார். இதில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர்கள் சிவமூர்த்தி , மருதமலை ஆகியோர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபட்டனர். அவர்கள் 10 இடங்களில் டம்மி வெடிகுண்டுகளை கியாஸ் சிலிண்டர் லாரிகளில் மறைத்து வைத்து அதனை மோப்ப நாய் ராபின் , உதவியுடன் கண்டறிந்து செயல் இழக்க செய்வது, மற்றும் தொழிற்சாலை கியாஸ் சேமிப்பு குடோன், சிலிண்டரில் கியாஸ் நிரப்பும் இடம், மற்றும் பல்வேறு இடங்களில் பரிசோதனை செய்தனர். பின்னர் செயல் இழக்க செய்வது போன்று ஒத்திகை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விபத்து நேரிட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அலுவலர்கள் , பணியாளர்கள், ஊழியர்கள், செக்யூரிட்டி பாதுகாவலர்களுக்கு விளக்கி கூறினர்.