சேலம் : 9 இடங்களில்‘மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்
சேலம் மாவட்டத்தில் இன்று 9 இடங்களில் ‘மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடக்கிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
‘மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் மாவட்டத்தில் 10-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) 9 இடங்களில் நடக்கிறது. அதன்படி சேலம் மாநகராட்சி, சூரமங்கல மண்டலம் 24-வது வார்டு இகியூடோஸ் குருக்கல் மண்டபத்தில் நடக்கிறது. அதே போன்று அஸ்தம்பட்டி மண்டலம் 16-வது வார்டுக்குட்பட்ட குளூனி மெட்ரிக் பள்ளியிலும், அம்மாபேட்டை மண்டலம் 38-வது வார்டு அருணாசலம் தெருவில் உள்ள செங்குந்த முதலியார் திருமண மண்டபத்திலும், கொண்டலாம்பட்டி 54-வது வார்டு அருணாசலம் பிரதான சாலையில் உள்ள எஸ்.ஆர்.எஸ் திருமண மண்டபத்திலும் நடக்கிறது.
அதே போன்று இடங்கணசாலை நகராட்சி 1, 2, 8, 9 ஆகிய வார்டு பகுதிகளுக்கு, நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தாரமங்கலம் நகராட்சி 23, 24, 25, 26 ஆகிய வார்டு பகுதிகளுக்குட்பட்டவர்களுக்கு சிவகாமியம்மாள் திருமண மண்டபத்திலும் நடக்கிறது. பி.என்.பட்டி பேரூராட்சி பகுதிக்கு முத்துலட்சுமி மகாலிலும், தெடாவூர் பேரூராட்சி 14-வது வார்டுக்கு பேரூராட்சி சமுதாய கூடத்திலும், எருமாபாளையம் கிராம ஊராட்சி பகுதிக்குட்பட்டவர்களுக்கு முத்தாயம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் முகாம் நடைபெறுகிறது. எனவே அந்தந்த பகுதி பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும்.
இந்த முகாமில் செயல்படும் இ-சேவை மையங்களில் வழக்கமாக பெறப்படும் சேவைக்கட்டணத்தில் 50 சதவீதம் மட்டும் பெற்றுக்கொள்ளப்படும். முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும். முகாமில் பெறப்படும் மனுக்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.