சேலம்: வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை சரிவு
பூக்களின் வரத்து அதிகரிப்பால் கடந்த வாரம் கிலோ ரூ.360-க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.80 குறைந்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி, காக்கட்டான் உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் பூக்களை பறித்து சேலம் கடைவீதியில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது.இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பூக்கள் விலை குறைந்துள்ளது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நேற்று சில பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.360-க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.80 குறைந்து ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிலோ ரூ.280-க்கு விற்ற சன்னமல்லி நேற்று ரூ.200-க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. காக்கட்டான் கிலோ ரூ.200-க்கும், கலர் காக்கட்டான் ரூ.120-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி ஆகியவை தலா ரூ.180-க்கும், செவ்வரளி ரூ.240-க்கும், நந்திவட்டம் ரூ.120-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது.