சேலம் அரசு பள்ளி மாணவி சாதனை !
சேலம் அரசு பள்ளியில் செயற்கை மழையில் நனைந்தபடி சிலம்பம் சுற்றிய மாணவி சாதனை படைத்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-06 11:02 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தையொட்டி, ஆஸ்கர் உலக சாதனை நிறுவனம் மற்றும் இ.கே.ஆர். சர்வதேச தற்காப்பு கலைக்கூடம் இணைந்து உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தின. இந்த நிகழ்ச்சியில் யோகா, ஓவியம், நடனம், இசை, சிலம்பம், கராத்தே உள்பட பல்வேறு துறைகளில் தனித்திறமை கொண்ட 600 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மல்லூர் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவியும், மல்லூர் வேங்காம்பட்டியை சேர்ந்த ஜம்பு-இந்துமதி தம்பதியின் மகளுமான 3-ம் வகுப்பு மாணவி யக்ஷதா (வயது 8) கலந்துகொண்டு செயற்கை மழையில் (ஷவர்) நனைந்தபடி ஒரு மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். இதையடுத்து மாணவி யக்ஷதாவுக்கு ஆஸ்கர் தனிநபர் உலக சாதனை சான்றிதழ் மற்றும் சிலம்பம் செல்வி விருது ஆகியவை வழங்கப்பட்டது. சிலம்பம் செல்வி விருது பெற்ற மாணவி யக்ஷதாவிற்கு சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி ஆசான் மாதையன், பெற்றோர், பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.