சேலம் மாநகராட்சி பணிகள் சரியாக நடக்கிறதா..? - ஆய்வு செய்த மேயர்
மாநகராட்சியின் வளார்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்த மேயர்.
சேலம் மாநகராட்சி, 44-வது வார்டில் நடைபெறும் திட்டப்பணிகளை மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆய்வு நடத்தினர். அதன்படி ரூ.25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மைய கட்டிடத்தை பார்வையிட்டனர்.
தொடர்ந்து களரம்பட்டி பகுதியில் ரூ.54 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் நூலக கட்டிட பணியை ஆய்வு செய்தனர். அப்போது பணியை விரைந்து முடிக்க கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். பின்னர் கஸ்தூரிபாய் தெரு பகுதியில் வடிகாலுடன் சாலை அமைக்கும் பணி, குகை எருமாபாளையம் சாலையில் உள்ள மதுர காளியம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
ஆய்வுக்கு வந்த மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோரிடம், வார்டு கவுன்சிலர் இமயவரம்பன் வார்டுக்குட்பட்ட பகுதியில் 'நமக்கு நாமே' திட்டம் மூலம் கைப்பந்து திடல் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது அதற்கான திட்ட மதிப்பீடு தயார் படுத்தும் படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சுமதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.