சேலம் : தென்னிந்திய தடகள போட்டிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
Update: 2023-12-19 05:20 GMT
தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் தென்னிந்திய அளவிலான தடகள போட்டி சென்னையில் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தடகள வீரர், வீராங்கனைகள் தேர்வு சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 350 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் உள்ளிட்ட 20 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் அகில இந்திய பல்கலைக்கழகத்தின் விதிமுறைகள் படி சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் மட்டுமே தென்னிந்திய அளவிலான தடகள போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு போட்டி இன்றும் நடைபெறுகிறது.