கலைஞர் நவீன சிற்பியாக உருவாக சேலமே உந்து சக்தி - எ.வ.வேலு

பழமையான தமிழ்நாட்டிலிருந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய பெருமைக்குரியவர் கருணாநிதி. திரைத்துறையில் சேலத்தில் வாழ்க்கையை தொடங்கியதால் தான் இந்த விழாவை சேலத்தில் சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். கருணாநிதி நவீன சிற்பியாக உருவாக சேலம் தான் உந்து சக்தியாக இருந்தது. என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்

Update: 2024-02-28 07:51 GMT

கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை சார்பில் சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ‘நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்' நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்து சிறப்பு மலரை வெளியிட்டார்.

விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பழமையான தமிழ்நாட்டில் இருந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய பெருமைக்குரியவர் கருணாநிதி. திரைத்துறையில் சேலத்தில் வாழ்க்கையை தொடங்கியதால் தான் இந்த விழாவை சேலத்தில் சிறப்பாக நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். கருணாநிதி நவீன சிற்பியாக உருவாக சேலம் தான் உந்து சக்தியாக இருந்தது. தமிழ்நாட்டில் குடிநீர் இல்லாமல் இருந்த நிலையை மாற்றிட, குடிநீர் வடிகால் வாரியம் அமைத்து அனைத்து கிராமங்களும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கினார். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது, கல்வியில் புரட்சி ஏற்படுத்தியது என அனைத்து சமுதாய மக்களுக்காக செயல்பட்ட காரணத்தினால் தான் அவர் சிற்பி என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

Similar News