காமாட்சியம்மன் கோயில் விழா - பால் குடம் சுமந்து நேர்த்திக்கடன்
நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களை சுமந்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
கடலில் மீன் வளம் பெருக வேண்டியும் பிரார்த்தனை. நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயில் திருவிழா கடந்த 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நாள் தோரும் அம்பாள் அம்ச வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இதையடுத்து இன்று இக்கோயிலின் முக்கிய திருவிழாவான அம்மனுக்கு பாலாபிஷேகம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக நாகை தெற்கு பால்பண்ணைச்சேரி பாலசுப்பிரமணியன் கோவிலில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் மங்கள மேளதாள வாத்தியங்கள் மற்றும் தார தப்பட்டைகள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சலாடையுடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். பின்னர் சாமந்தான்பேட்டை காமாட்சியம்மன் கோயிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து கடலில் மீன் வளம் பெருக வேண்டும், கடலுக்குச் சென்று தங்கள் குடும்பத்தார் பாதுகாப்புடன் திரும்ப வேண்டும், உலக அமைதி வேண்டியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.