காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தியவர் கைது
கரூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதாக காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், மார்ச் 23ஆம் தேதி காலை 7 மணி அளவில், வாங்கல் மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே, அரசு காலனியைச் சேர்ந்த அய்யனார் மகன் சேதுபதி என்கிற கார்த்திக் வயது 43 என்பவர், டாட்டா ஏஸ் வாகனத்தில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அந்த வாகனத்தை பறிமுதல் செய்து, வாகனத்தில் கடத்தி வந்த அரை யூனிட் காவிரி ஆற்று மணலை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர். பின்னர் சேதுபதி என்கிற கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.