மணல் கடத்தல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் அனுமதியின்றி டிப்பர் லாரிகளில் எம்சாண்ட் மணல் மற்றும் குண்டுக்கல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-03 15:54 GMT

மணல் கடத்திய லாரி

தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரபு நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது புதுக்கோட்டை, மங்களகிரி விலக்கு அருகே டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி 20 டன் எடையுள்ள வெளிர்நிற எம்சாண்ட் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து லாரியுடன் மணலையும் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட லாரி டிரைவரான தெய்வச்செயல்புரத்தை முருகனையும் புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்குப்பதிவு செய்து டிரைவர் முருகனை கைது செய்தார்.

மேலும் இதில் தொடர்புடைய லாரி உரிமையாளரான கீழதட்டப்பாறை இம்மானுவேல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் கீழதட்டப்பாறை ஜோதிநகர் சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் உரிய அனுமதியின்றி சுமார் 2 யூனிட் அளவு குண்டுக்கல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரி டிரைவரான திம்மராஜபுரம் நடுகாலனியைச் சேர்ந்த சத்தியநேசன் (25) என்பவரையும், பறிமுதல் செய்த 2 யூனிட் குண்டுக்கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியையும் தட்டப்பாறை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் சத்தியநேசனை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய டிப்பர் லாரியின் உரிமையாளரான புதுக்கோட்டையை சேர்ந்த வேலாயுதம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News