அரியவகை மீன்கள் கண்டு களித்த பள்ளி மாணவ மாணவிகள்!
தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் அரியவகை மீன்களைபள்ளி மாணவ மாணவிகள் கண்டு களித்தனர்.
இந்தியாவில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் 1947 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதை முன்னிட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாம் தேதி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயற்கை முத்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளம் குறித்து என்னென்ன ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது என்பது குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் விளக்கி கூறினர்.
மேலும் இந்த ஆராய்ச்சி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த மீன்களின் வகைகள் ,கடல் அட்டைகள், இறால் வகைகள், நண்டு வகைகள், கடல்விசிறிகள், கடல் பஞ்சு ,கடல் சங்கு பவளப்பாறைகள், கடல் குதிரை வகைகள் உள்ளிட்டவற்றை பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். இந்த ஆராய்ச்சி நிலையத்தை தாங்கள் நேரடியாக வந்து பார்த்தது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.