தொல்லியல் நோக்கில் சுதைச்சிற்பம் - ஸ்பெயின் பல்கலையுடன் ஒப்பந்தம்

தொல்லியல் நோக்கில் சுதைச்சிற்பம் செய்வதற்கான இந்திய மரபுமுறைகளை ஆய்வு செய்ய, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையும், ஸ்பெயினில் உள்ள பார்சலோனா பல்கலைக்கழகத்தின் தொல்லியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

Update: 2024-03-26 07:49 GMT

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இடைக்கால அறிவியல் தொழில் நுட்பம் என்ற தலைப்பில் பன்னாட்டளவிலான பணிப்பட்டறை நடைபெற்றது.  இப்பணிப்பட்டறையில் பார்சலோனா பல்கலைக்கழகத்தின் தொல்லியல்  நிறுவனத்தின் முனைவர் மோனிகா லோபஸ் பிராட் பங்குபெற்று மத்திய ஆசியாவின் பட்டுப்பாதையில்  காணப்படும் மரபுச் சுதைச் சிற்பங்களையும், வங்காளத்தில் செய்யப்பெறும் சுதை, மண் சிற்பங்கள் குறித்தும் பேசினார். 

தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன்  தமிழகத்தின் மரபு வழி அறிவை நாம் விரிவாக ஆராய்ந்து சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மீட்டெடுக்கவேண்டும் என்று கூறினார்.   இவ்விழாவில், சோழர்கால நீரியல் குறித்து பொறிஞர் இரா.கோமகன் உரையாற்றினார். சோழர்கால நீரியல் நுட்பங்களைக் குறித்து விரிவாக,  கொள்ளிடம்-காவிரிப்படுகையின் நிலவமைப்பு, சேரோடி உள்ளிட்ட அமைப்புகளைக் குறித்து எடுத்துரைத்தார்.  மேலும் மேனாள் பேராசிரியர் பா.ஜெயக்குமார்  நிக்கோபார் தீவுகளின் மரபு வழிப் படகுகளைப்  பற்றி பேசினார்.

ஆந்திர-கர்னாடகச் சுதைச்சிற்பங்கள் குறித்து, பெங்களூரு இந்திய வரலாற்றாய்வுக் கழகம் முனைவர் எஸ்.கே அருணி உரையாற்றினார். முனைவர், மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை முதல்வர்  இராமன், தமிழகத்தில் சுதைச்சிற்பம் செய்யும் முறைகளைக் குறித்து எடுத்துரைத்தார். முனைவர் கி.இரா.சங்கரன் புதுக்கோட்டைப் பகுதியின்   நீர்ப்பாசன முறைகளை எடுத்துரைத்தார்.  பதிவாளர் முனைவர் சி. தியாகராஜன், புலத் தலைவர், முனைவர் த.கண்ணன், துறைத்தலைவர் வீ. செல்வகுமார் ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News