தஞ்சாவூரில் கடற்பசு பாதுகாப்பு கருத்தரங்கம்

மன்னார் வளைகுடாவில் காணப்படும் கடற்பசுக்களை பாதுகாக்க தொடர்ந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட வன அலுவலர் கூறினார்.

Update: 2024-03-01 14:37 GMT
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்திடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கும் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி ( வலது ஓரம்) 

மன்னார் வளைகுடாவில் காணப்படும் அரியவகை உயிரினமான கடற்பசுக்களை பாதுகாக்க பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தெரிவித்தார். தஞ்சாவூரில், வெள்ளியன்று தமிழ்நாடு வனத்துறை சார்பில் கடற்பசு பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கத்தை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி துவக்கி வைத்து பேசியதாவது: உலகிலேயே மிகவும் அரிதான கடல்வாழ் பாலூட்டி வகையினைச் சேர்ந்த உயிரினம் கடற்பசு. அபூர்வமான இந்த கடற்பசு தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் அருகே மனோரா பகுதியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தையொட்டியுள்ள கடலோரப் பகுதியிலும் சுமார் 150 எண்ணிக்கையில் காணப்படுகிறது.

இதனை ஆய்வின் மூலம் தெரிந்து கொண்டு மத்திய, மாநில அரசுகள் இப்பகுதியினை உலகின் முதல் கடற்பசு காப்பகமாக அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.90 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தனித்துவமிக்க உயிரினமான இந்த கடற்பசு வாழ்வதற்கு ஏற்புடைய சூழல் இங்கு அமைந்துள்ளது சிறப்பாக ஒன்றாக கருதப்படுகிறது. ஆழம் குறைவான கடற்பகுதி, அலைகள் மிதமான கடலோரப்பகுதி, தூய்மை மிகு கடற்பகுதி மற்றும் இந்த கடற்பசுக்கு உகந்த கடற்தாழை எனும் அரிய புல்வகை காணப்படுகிற பகுதியாக உள்ளது. அதே போல் இப்பகுதியில் கடற்பசு இனப்பெருக்கம் செய்யவும், குட்டிபோட்டு பாலூட்டுவதற்கும், இரையினை உட்கொள்ளவும் தனது இனத்தை தக்கவைத்துக் கொள்ளும் பருவ சூழ்நிலையும் அமைந்துள்ளது. உலகில் அழிந்து வரும் இந்த கடற்பசு இனம் நம் கடலோரப் பகுதியில் அதிகமாக வசிக்கிறது.  மீனவர்களின் வலைகளி்ல் சிக்கியும், படகுகளில் மோதியும், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்களால் இந்த கடற்பசுக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.

இந்த இனத்தை பாதுகாக்கவும், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து கருத்தரங்கில் கடற்பசுக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து, தேசிய கடற் ஆராய்ச்சி மையத்தின் திட்ட விஞ்ஞானிகள் ருக்மினி ஷேகர், ஆனந்த் பாண்டே, சத்தியபாமா கல்லூரி கடற் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் அமித்குமார், ஓம்கார் பவுண்டேசன் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் வி.பாலாஜி,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் மற்றும் வனத்துறை, கால்நடைதுறை, மீனவளத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் மனோரா பகுதியைச் சேர்ந்த மீனவப்பிரதிநிதிகளுக்கு கடற்பசுக்களை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு கையேடுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News