உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் - மாவட்ட ஆட்சியர் பல்வேறு பணிகளை மேற்கொண்டார்

வத்திராயிருப்பு வட்டாரப்பகுதிகளில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம் மூலம் ஒருநாள் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2024-02-22 11:37 GMT
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டாரப்பகுதிகளில் மக்களை நாடி மக்களின் குறைகளை தீர்க்க “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின் மூலம் ஒருநாள் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசு மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் மையமாகக் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. அவற்றின் பலன் மக்களைச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டியதும், மக்கள், அரசு நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகளைக் களைய வேண்டியதும் அரசு இயந்திரத்தின் முதன்மையான பணி ஆகும். அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மக்களையும் அரசையும் இணைக்கும் பாலமாகச் செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வத்திராயிருப்பு வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்கள், பள்ளிகள், சத்துணவுக் கூடங்கள், நியாயவிலைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் வழங்கப்பட்டு வரும் சேவைகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனடிப்படையில், வத்திராயிருப்பு வட்டம், அயன்கரிசல்குளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று, கிராம கணக்கு பதிவேடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அயன்கரிசல்குளம் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு, நேரில் சென்று பார்வையிட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள் வருகை, மருந்துகள் இருப்பு, அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அயன்கரிசல்குளம் கிராமத்தில் செயல்படும் பொது நூலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு, பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அயன்கரிசல்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவுகளின் தரம்; குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அயன்கரிசல்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளிக்கான தேவைகள் குறித்து தலைமையாசிரியரிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, மாணவர்களிடம் கலந்துரையாடி உயர்கல்வி வாய்ப்புகள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராவது என்பது குறித்தும், சரியான வழிகாட்டுதலும் பயிற்சியுமே வெற்றியை தேடி தரும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, நத்தம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்து, புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு வழங்கினார். மேலும் நத்தம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.8.82 இலட்சம் மதிப்பிலான கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, குழந்தைகளின் எண்ணிக்கை, வயதிற்கேற்ற எடை மற்றும் உயரம், வழங்கப்படும் ஊட்டசத்து உணவுகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், கோட்டையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேரில் சென்று பார்வையிட்டு, மருத்துவர்கள் எண்ணிக்கை, புறநோயாளிகள் வருகை, சிகிச்சை அளிக்கும் முறைகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, மருத்துவமனைக்கு வருகை தந்த கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்களிடம் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள், மருந்துகள், மருத்துவ பணியாளர்களின் அணுகுமுறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மகாராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் சென்று, அங்கு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், மகாராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் வழங்கப்படும் சேவைகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொதுமக்களின் சேவை மனுக்களுக்கான தீர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளதா என கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள், நடைபெற்று வரும் பணிகள், அதன் தற்போதைய நிலை உள்ளிட்டவைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளி கல்வியில் இடைநிற்றல் மாணவர்களை சந்தித்து, கல்வியை தொடர்வதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து, அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.18000/- மதிப்பிலான திருமண நிதி உதவிகளையும், இயற்கை மரணமடைந்த 4 நபர்களின் குடும்பத்தார்களுக்கு தலா ரூ.20,000/- மும், 2 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாறுதல் உத்தரவுகளையும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு பால் பண்ணை அமைக்க மானியத்துடன் கூடிய ரூ.1.60 இலட்சம் கடனுதவியையும் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ.2.76 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
Tags:    

Similar News