வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் : ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் 19.04.2024 அன்று வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைத்து 20.04.2024 அன்று வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையில் சீலிடப்பட்டது.
இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 243 கண்காணிப்பு கேமராக்கள் வைப்பறை மற்றும் வளாகத்தின் உள்பக்கம்/ வெளிப்பக்கம் பொருத்தப்பட்டு கண்காணிக்கபட்டு வருகிறது. மேலும், இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி வேட்பாளர்கள் / அவர்களின் முகவர்கள் பாதுகாப்பு அறையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள வெளிப்புற சுற்றில் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவுகளைப் பார்வையிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வேட்பாளர்கள்/ வேட்பாளர் பிரதிநிதிகளை அவ்வப்போது குழுக்களாக வாக்கு எண்ணும் மையத்தின் உட்புற சுற்றுக்குள் பாதுகாப்பு அறையின் பாதுகாப்புத் தன்மை குறித்து சரிபார்த்து திருப்தியடையும் வகையில் அழைத்துச் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.