தொடர் விபத்துகள் : டாஸ்மாக் கடைகளை மாற்ற வலியுறுத்தி சாலை மறியல்

கெலமங்கலத்தில் டாஸ்மாக் கடை அருகே நடந்த விபத்தில் ஒருவர் உயிழந்தார். இதையடுத்து தொடர் விபத்துகளுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-05-10 02:13 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலத்தில் கெலமங்கலத்திலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் சாலை ஓரத்தில் மூன்று டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் உள்ளது. இந்த டாஸ்மாக் கடை பகுதியில் அதிக அளவில் மது பிரியர்கள் கூட்டம் இருக்கும் இந்த நிலையில் நேற்று கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ் (55) என்பவர் சைக்கிளில் கிராமத்திலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்றுள்ளார். அப்போது டாஸ்மாக் கடை அருகே அவர் சென்றபோது டாஸ்மாக் கடையிலிருந்து வந்த ஒரு டாடா சுமோ வாகனம் சைக்கிள் மீது மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட கெலமங்கலம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசின் உறவினர்கள் மற்றும் அவரது கிராமத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கெலமங்கலம் டாஸ்மாக் கடை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக இந்த பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ச்சியாக இந்த டாஸ்மாக் கடை பகுதி சாலையில் விபத்துக்கள் நடந்து வருகிறது இதனால் அதிக அளவில் உயிரிழப்பு மற்றும் படுகாயங்கள் ஏற்படுகிறது என குற்றம் சாட்டினர். இதுகுறித்து அறிந்த கெலமங்கலம் போலீசார் மற்றும் டிஎஸ்பி சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் சமாதானமாகாமல் அப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேன்கனிக்கோட்டை கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News