பஸ் நிலையத்தில் சிறுமியிடம் சில்மிஷம்; வாலிபருக்கு தர்ம அடி
நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் இருந்த சிறுமிக்கு, மதுபோதையில் அத்துமீறி பாலியல் தொல்லை அளித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானார் பகலில் தொழில் செய்து விட்டு குடும்பம் குடும்பமாக இரவில் தங்குவது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பஸ் நிலையத்தின் பின்பகுதியில் நரிக்குறவர்கள் ஏராளமானவர்கள் தங்கி தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடன் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் துவங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பஸ் நிலையத்தில் போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் அந்த சிறுமியின் அருகில் சென்று பின்னர் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் நைசாக சில்மிஷம் செய்துள்ளார். இதனால் தூக்கத்திலிருந்து கண்விழித்த சிறுமி சத்தம் போட்டார். உடனே போதையில் வாலிபர் தள்ளாடியபடி அங்கு இருந்து தப்பிக்க முயன்றார்.
அப்போது அங்கிருந்த பயணிகள் மற்றும் நரிக்குறவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். வலி தாங்க முடியாமல் அந்த வாலிபர் தன்னை மன்னித்துவிடும்படி கூறினார். பின்னர் அந்த சிறுமியின் காலில் விழுந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த தாக்குதலில் அந்த வாலிபரின் சட்டை , பேண்ட் கிழிந்தது. இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.