பாலியல் தொல்லை : முதியவருக்கு தர்ம அடி,போக்ஸோவில் வழக்குப்பதிவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 86 வயது முதியவருக்கு உறவினர்கள் தர்மஅடி கொடுத்தனர். மேலும் அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் அருகே வலசையூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மாபேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தாள். பின்னர் நேற்று முன்தினம் மாலை சிறுமி அதே பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்துக்கு சென்றாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த அம்மாசி (வயது 86) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி உறவினர்களிடம் தெரிவித்தாள். இதையடுத்து அங்கு சென்ற உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அம்மாசிக்கு தர்மஅடி கொடுத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அவளது பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் அம்மாசி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.