விதி மீறும் ஷேர் ஆட்டோக்கள் - கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை.
காஞ்சிபுரத்தில் அரசு விதிகளுக்கு புறம்பாக அதிக பயணிகளை ஏற்றி செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு திருக்கோயில்களும் பரிகார தலங்களும் அமைந்துள்ளது. இதனை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் காஞ்சிபுரம் வருகை புரிகின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புறநகரில் பக்தர்கள் பயணிக்கும் வேன் பஸ் உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து திருக்கோவிலுக்கு செல்லும் நிலை தற்போது உள்ளது. இதனை சாதகமாக்கிக் கொள்ளும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோக்களில் அதிக பயணிகளை அரசு விதிகளில் மீறி ஏற்றி செல்லும் ஆபத்தான நிலையை தற்போது உள்ளது.
மேலும் காஞ்சிபுரத்தில் எந்த ஒரு அரசு நகர பேருந்துகளும் செயல்படாத நிலையில் இதை நம்பியே பக்தர்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு வீதிகளை மீறி செயல்படும் ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்களும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் இஷ்டப்படி பயணிகளை அதிகம் ஏற்றி செல்லும் நிலையும் வேகமாக செல்லும் நிலையும் பார்க்கும் பொதுமக்கள் பயணிகளின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தியதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.
ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரும் போட்டி போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வது பக்தர்களுக்கு இடையே முகம் சுளிக்க வைக்கவும் செய்கிறது. சாதாரண பொது மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் வழியில் தொடர்ச்சியாக அபராதம் விதிப்பதாக கூறி வரும் நிலையில் இது போன்ற வாகன ஓட்டிகளை கண்டுகொள்ளாத காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து துறையின் செயல் அரசு விதிகளை நடைமுறைப்படுத்தி செயல்படுத்துமா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.