பாமாயில் தட்டுப்பாடு... ரேஷன் அட்டைதாரர்கள் வருத்தம்

ரேஷன் கடைகளுக்கு போதிய அளவு பாமாயில் வழங்க வேண்டும் என, மதுராந்தகம் சுற்றுவட்டார ரேஷன் அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-05-08 12:01 GMT
பாமாயில் தட்டுப்பாடு, ரேஷன் அட்டைதாரர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில், செய்யூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்குகள் உள்ளன. இங்கிருந்து, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக, மதுராந்தகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்கில், பாமாயில் போதுமான அளவு இருப்பு இல்லை. மதுராந்தகம் வட்டத்தில், 229 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், 90,773 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

இதில், 76,000த்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு, பாமாயில் வழங்கப்பட்டு வருகிறது. மதுராந்தகம் அருகே சிலாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வட்ட செயல்முறை கிடங்கில் இருந்து, கடந்த மாதம் பாமாயில் காலதாமதமாக வழங்கப்பட்டது.

தற்போது, மே மாதத்தில் குறைந்த அளவே பாமாயில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதிய அளவு பாமாயில் இருப்பு இல்லாததால், அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை மட்டுமே வாங்கி செல்கின்றனர். ரேஷன் கடைகளில் பாமாயில் இல்லாததால், கிடங்கில் இருந்து பாமாயில் லோடு வந்த பின், மீண்டும் ஒரு முறை ரேஷன் கடைக்கு வந்து, பாமாயில் வாங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், கூலி வேலைக்கு செல்வதால், பாமாயில் வாங்குவதற்காக விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக, ரேஷன் பொருட்கள் விற்பனையாளருக்கும், அட்டைதாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

குறிப்பாக, பாமாயில் தட்டுப்பாடு ஏற்படுவதால், கிராம பகுதிகளில், ஒரு ரேஷன் கடைக்கு உட்பட்ட அட்டைதாரர்களை இரு பகுதிகளாக பிரித்து, மாதத்தில் முதல் 15 நாட்களில் ஒரு பகுதியினருக்கும், அடுத்த 15 தினங்களுக்குள் மற்றொரு பகுதியினருக்கும் என, சுழற்சி முறையில் வழங்குகின்றனர் என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் போதே, பாமாயிலும் போதுமான அளவு சேர்த்து வழங்க வேண்டும் என, மதுராந்தகம் சுற்றுவட்டார ரேஷன் அட்டைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News