ரயில்வே நிலத்தை பாதுகாக்க கையெழுத்து இயக்கம் - எம்பி துவக்கி வைப்பு
ரூ 1200 கோடி மதிப்பிலான மதுரை இரயில்வே நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி நடைபெறும் கையெழுத்தியக்கத்தை எம்.பி சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார்.
மதுரை, அரசரடி இரயில்வே விளையாட்டு மைதானம், மற்றும் ரயில்வே காலனி பகுதி நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடக்கோரி மதுரை இரயில்வே நில பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரசரடி ரயில்வே மைதானம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பால்சாமி தலைமை வகித்தார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச் செல்வி, மாமன்ற உறுப்பினர்கள் எம். ஜெயராமன், மகாலட்சுமி அழகுசுந்தரம், வை. ஜென்னியம்மாள், டி. குமரவேல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா. கனேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம் பி பேசுகையில் “ ரயில்வே மைதானம் மற்றும் இரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலத்தின் சந்தை மதிப்பு ரூ 1200 கோடிக்கும் அதிகமாகும். இது பல்லாயிரம் விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மைதானம் ஆகும். இம்மைதானத்தினை நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயண்படுத்துகின்றனர். இரயில்வே காலனி பகுதியில் 1550 மரங்கள் உள்ளது. மதுரை மாநகராட்சி முழுவதும் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை விட இந்த சிறிய பகுதிக்குள் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம். மதுரை மக்களுக்கு சுவாசிக்க நல்ல காற்றையும், சுற்றுச்சூழலை காக்கவும் இந்த பகுதி மிகமுக்கிய பங்காற்றுகிறது. எனவே தான் இந்தப்பகுதியை மதுரையின் நுரையீரல் என்கிறோம். தனியார் நிறுவனங்களுக்கு இந்த நிலத்தை தாரைவார்ப்பதென்பது மதுரைக்கு மிகப்பெரும் தீங்கை இழைக்கும் செயலாகும். இதனை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என வழியுறுத்தி இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தை துவக்குகிறோம். மதுரையின் நுரையீரலாக கருதப்படுகிற இந்த இடத்தை காக்க இம்மாநகரை நேசிக்கிற ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். நாம் நினைத்தால் இந்த கொடிய செயலை தடுத்து நிறுத்த முடியும். கேரளாவில் இதே போன்ற முயற்சியில் இரயில்வே நிர்வாகம் ஈடுபட்ட பொழுது கேரள மக்கள் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே போன்று மதுரை ரயில்வே நிலத்தை விற்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி தமிழகத்துக்கு சிறந்த முன்னுதாரணத்தை மதுரை மக்களாகிய நாம் உருவாக்குவோம். இந்த மைதானத்தையும், இரயில்வே காலனி நிலத்தையும் பாதுகாக்க நினைக்கும் ஒவ்வொருவரும், இரயில்வேயின் சொத்து தனியாருக்கல்ல என்ற கொள்கையில் உடன்பாடுள்ள ஒவ்வொருவரும் இந்த கையெழுத்து இயக்க பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாம் விழிப்போடு பணியாற்றினால் இரயில்வேயின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த முடியும். நிச்சயம் நாம் இதில் வெற்றி பெறுவோம்.” என்று கூறி கையெழுத்தியக்கத்தை துவக்கிவைத்தார்.