மதுபோதையில் இருந்தவரை முட்டி தள்ளிய ஒற்றை யானை!
மதுபோதையில் இருந்தவரை ஒற்றை யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர்.
கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய ஆண் ஒற்றை யானை நேற்று இரவு முதல் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் சுற்றி வருகிறது. இன்று காலை அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்த நிலையில் தற்போது அந்த யானை குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது.மேலும் சிறுவாணி சாலையை அவ்வப்போது கடந்தும் அருகில் உள்ள வாழை தோட்டத்திலும் புகுந்து வருவதால் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பச்சாபாளையத்தில் இருந்து வெளியேறிய யானை சிறுவாணி மெயின் ரோட்டை கடந்து எதிர் புறம் உள்ள குளத்திற்குள் செல்ல முயன்றது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டவாறு ஓடியதால் மிரண்ட யானை திடீரென சாலை ஓர கடைகளுக்குள் புகுந்து செல்ல முயன்றது.அப்போது அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்த மருதமுத்து என்பவரை கீழே தள்ளியதில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.இதனையடுத்து அவரை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வனத்துறை வாகனத்தில் அனுப்பி வைத்தனர். மேலும் தற்போது பச்சாபாளையம் பகுதியில் அந்த யானை முகமிட்டு இருப்பதால் வனத்துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.