சிப்காட் போராட்டம் - விவசாயிகள் ஜாமீனில் விடுதலை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் அலகு 3க்காக 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 375 ஏக்கர் பரப்பளவு அரசு புறம்போக்கு நிலம். மீதி நிலம் தனியாருக்கானவை. நில உரிமையாளர்களில் 231 பேர் தவிர 2 ஆயிரத்து 185 பேர் தங்கள் நிலத்தை சிப்காட் அமைப்பதற்காக தர ஒப்புக்கொண்டனர். நிலம் ஒப்படைக்க மறுப்பு தெரிவிக்கும் 231 பேர் தங்கள் விவசாய நிலத்தை ஒப்படைப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.கடந்த 2ம் தேதி ஊர்வலமாக சென்று ஆர்டிஓவிடம் மனு அளிக்க முடிவு செய்தனர். ஆனால் போராட்டத்துக்கு அனுமதியில்லை என்று கூறி ஊர்வலமாக செல்ல முயன்ற 147 பேரை போலீசார் கைது செய்து அன்றைய தினமே விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்து ஆர்டிஓவிடம் மனு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் மேல்மா என்ற இடத்தில் மறியல் செய்தனர். இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 147 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 4ம் தேதி அதிகாலை விவசாயிகளின் போராட்டத்துக்கு காரணமாக இருந்ததாக கூறி 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 15 பேர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் திருவண்ணாமலை கோர்ட்டில் மேற்கண்ட 20 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் வேலூர் மத்திய சிறைக்கு நேற்று காலை வந்த நிலையில் இங்கு அடைக்கப்பட்டுள்ள 15 பேரில் பெருமாள் என்பவரை தவிர 14 பேரும் வழக்கமான நடைமுறைகளுக்கு பின்னர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். பெருமாள் மீது வேறொரு வழக்கு இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.