ரூ.21 கோடியை எட்டிய சிவகாசி மாநகராட்சி வரி வசூல்

சிவகாசி மாநகராட்சியில் நிலுவையில் இருந்த 90 சதவீத வரிகள் வசூல் செய்யப்பட்டுள்ளது இதுவரை ரூ.21கோடி வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-21 02:15 GMT
சிவகாசி மாநகராட்சி அலுவலகம் 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி,திருத்தங்கல் நகராட்சிகள் இணைக்கப்பட்டு 2021 அக். 21 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சி உருவாகி 3 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சிவகாசி மாநகராட்சி 69 சதவீதம் வரிகளை வசூல் செய்து 2-வது இடத்தை பெற்றது.தற்போது நடப்பாண்டில் வரிவசூலில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொத்துவரி, காலிமனை வரி,தொழில்வரி, குடிநீர் கட்டணம்,கடை வாடகை, குப்பை வரி என ஆண்டுக்கு ரூ.23 கோடியே 67 லட்சம் வருவாய் கிடைக்கும்.இந்த ஆண்டு இதுவரை ரூ.21கோடியே 35 லட்சம் வசூலாகி உள்ளது. இதில் சொத்துவரியாக ரூ16 கோடியே 25 லட்சமும், காலி மனை வரியாக ரூ.26 லட்சமும், தொழில் வரியாக ரூ.27 லட்சமும், குடிநீர் கட்டணமாக ரூ 1கோடியே 40 லட்சமும், கடை வாடகைகள் மூலம் ரூ.1 கோடியே 17 லட்சமும், குப்பை வரியாக ரூ.55 லட்சமும் என மொத்தம் ரூ.21 கோடியே 35 லட்சம் வசூலாகி உள்ளது.

இது நடப்பாண்டு மொத்த வரியில் சுமார் 90சதவீதம் வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு வர வேண்டிய மீதமுள்ள 10 சதவீதம் வரிகளை வசூலிக்க தேவையான நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Tags:    

Similar News