வனப்பகுதியிலுள்ள செந்நாய்களுக்கு தோல்நோய் பாதிப்பு

முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட செந்நாய்களுக்கு தோல்நோய் தாக்கி உடல் நிலை பாதிக்கபட்டு உயிருக்கு போராடி வருவது தெரிய வந்துள்ளது.

Update: 2024-04-12 16:25 GMT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ளது. புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள் உட்பட அழிந்து வரும் பட்டியலில் உள்ள செந்நாய்கள் என பல்வேறு வனவிலங்குகள் இந்த வனப் பகுதியை வாழ்விடமாக கொண்டுள்ளன. தெரு நாய்களுக்கு பரவும் தோல்நோய் மசினகுடி வன பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட செந்நாய்களுக்கு பரவி உள்ளது.

இதனால் அவற்றின் உடலில் உள்ள முடிகள் கொட்டி, புண் ஏற்பட்டு உடல் நிலை மோசமான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றன. குறிப்பாக வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதினால் உயிரிழக்கும் நிலையில் இருக்கும் அவற்றின் புகைபடங்களையும் சுற்று சூழல் ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் தோல்நோயால் பாதிக்கபட்டுள்ள செந்நாய்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு வன உயிரின தலைமை பாதுகாவலருக்கு கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழகத்தில் முதுமலை சத்தியமங்கலம் உள்ளிட்ட சில வனப் பகுதிகளில் மட்டுமே செந்நாய்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்து வரும் நிலையில் முதுமலையில் உள்ள செந்நாய்களுக்கு தோல் நோய் பரவி இருப்பது சுற்று சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோய் மற்ற வன விலங்குகளுக்கும் பரவும் முன் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News