1360 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - 2 பேர் கைது
மதுரை மேல அனுப்பானடியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் 1360 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தமிழக உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை தலைவர் உத்தரவுப்படி மதுரை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் விஜயகார்த்திக்ராஜா மேற்பார்வையில் அவரது ரகசிய தகவலின் பேரில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகதீசன், காவல் ஆய்வாளர் வனிதா, சார்பு ஆய்வாளர் முத்துராஜா மற்றும் இராமச்சந்திரன், வட்டாட்சியர் பறக்கும்படை குடிமைப்பொருள் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு சம்மந்தமாக வாகன சோதனை செய்தனர்.
அப்போது மேல அனுப்பானடி இரயில்வே கேட் அருகில் சந்தேகப்படும் படியாக வந்த நான்கு சக்கர வாகனத்தில் தலா 40 கிலோ எடை கொண்ட 34 வெள்ளைநிற பாலீத்தின் சாக்குகளில் மொத்தம் சுமார் 1360 கிலோ ரேசன் புழுங்கல் அரிசி ஏற்றி வெளி மாவட்டங்களுக்கு கடத்த முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அது சம்மந்தமாக வாகன உரிமையாளரான மதுரையை சேர்ந்த ஆனந்தராம், டிரைவர் ஹரிஹரன் ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இது போன்று குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர் அதிரடி சோதனை நடைபெறும் எனவும் குற்றவாளி மீது கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தார். மேலும் உணவுப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800-599-5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டது.