சமூக சேவகர்களுக்கு குடியரசு தின விழாவில் பாராட்டு

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடியாக அங்கு சென்று இரு நாட்கள் தங்கியிருந்து 12 ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்கிய திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு தன்னார்வலர்களுக்கு "சிறந்த சேவைக்கான" பாராட்டுச் சான்றிதழை குடியரசு தின விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-01-28 04:41 GMT

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ம் தேதி தூத்துக்குடி உள்ளி்ட்ட நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் உடைப்பெடுத்து தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்தது. இந்த மழை வெள்ளத்தால் நான்கு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குடிநீர், உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டத்தால், வெளிமாவட்டங்களிலிருந்து நிவாரணப் பொருட்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தன்னார்வ அமைப்புகளின் சார்பிலும் வழங்கப்பட்டது

. இந்த நிலையில் தூத்துக்குடி மக்களின் துயரத்தை கேள்விபட்டதும், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மெஸ் நடத்தி வரும் டி.சரவணக்குமார் (53), பழக்கடை நடத்தி வரும் ஏ.ஜெய்னுலாபுதீன்(58) ஆகிய இருவரும் குடும்பத்தினருடன் தூத்துக்குடி சென்று அங்கு உள்ள பள்ளியில் இரு நாட்களாக தங்கி உணவு சமைத்து, 12 ஆயிரம் பேருக்கு வழங்கினர். இந்த சமூக சேவையை பாராட்டும் விதமாக தஞ்சாவூரில்  (ஜன.26-ஆம் தேதி) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இருவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்து, பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து டி.சரவணக்குமார், ஏ.ஜெய்னுலாபுதீன் ஆகியோர் கூறியதாவது: நாங்கள் திருக்காட்டுப்பள்ளியில் மெஸ்ஸூம், பழக்கடையும் நடத்தி வருகிறாம். பசித்தவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதால், நாங்கள் இருவரும் சேர்ந்து வள்ளலார் வழியில் பசிப்பிணியை எங்களால் முடிந்தவரை போக்கி வருகிறோம். சுனாமி பாதிப்பு, கஜா புயல் பாதிக்கப்பட்ட போதும் நாகை மாவட்டங்களுக்கு சென்று நான்கு நாட்கள் தங்கி அவர்களுக்கு உணவு சமைத்து வழங்கினோம். அதே போல் கொரோனா காலத்திலும் நாங்கள் இருவரும் தொடர்ந்து நாளொன்றுக்கு 100 பேருக்கு ஒரு மாதம் உணவு வழங்கினோம். தற்போது தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், உடனடியாக அங்கு எங்களது குடும்பத்தினரோடு சென்று உணவு சமைத்து, அங்கு 12 ஆயிரம் பேருக்கு வழங்கினோம். எங்களுக்கு உதவிட எங்கள் ஊரைச் சேர்ந்த 18 பேரும் எங்களோடு வந்து உணவு சமைக்கும் பணியில் இணைந்தனர். தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள் வழங்கிய ரூ.10 ஆயிரத்தோடு, எங்களது சேமிப்பான ரூ.1.10 லட்சமும் சேர்த்து ரூ.1.20 லட்சம் செலவானது. எங்களுக்கு செலவு செய்யும் தொகை பெரிதல்ல, பசித்தவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்குவதே எங்களது நோக்கம். அதே போல், வடலூரில் ஜோதி தரிசனத்துக்காக வரும் ஏழை எளியோருக்கு 100 போர்வைகளை ஜெய்னுலாபுதீன்  வழங்கினார். நாங்கள் இருவரும் சேவை செய்வதில் நண்பர்களாகி, தற்போது எங்கு யாருக்கும் உதவி என்றால் முதலில் சென்று அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம்" என்றனர்.

Tags:    

Similar News