சோளிங்கர்: ரூ.53 கோடியில் வளர்ச்சி பணிகள்- அதிகாரி ஆய்வு!
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
ராணிபேட்டை சோளிங்கர் நகராட்சியில் ரூ.53 கோடியே 23 லட்சத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பொன்னை ஆற்று குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி, அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சிகளின் வேலூர் மண்டல இயக்குனர் (பொறுப்பு) இளங்கோ ஆய்வு மேற்கொண்டார். அப்போது சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு பொன்னை ஆற்று குடிநீர் வழங்க ரூ.47 கோடியே 48 லட்சம் மதிப்பில் பைப் லைன் அமைக்கும் பணிகள், ரூ.5 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை புதிய கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கட்டுமான பணிகளை குறித்த காலத்தில் முடிக்க வேண்டும், கட்டுமான பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து குப்பை கிடங்கில் ஆய்வு செய்தபோது தினசரி சேகரிக்கும் குப்பைகளை அன்றே தரம் பிரித்து பணிகளை சீராக செய்ய உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி ஆணையர் கன்னியப்பன், பொறியாளர் ஆசிர்வாதம், பணி மேற்பார்வையாளர் ஆனந்தன்,பணி ஆய்வாளர் மனோஜ்குமார், நகராட்சி துணைத் தலைவர் பழனி,நகராட்சி கவுன்சிலர் கணேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.