சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது
கெண்டையன அள்ளி ஊராட்சி வெள்ளமன்காடு பகுதியில் சொத்து தகராறில் தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரியூர் அருகே உள்ள கெண்டையன அள்ளி ஊராட்சி வெள்ளமன்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜி. இவருடைய மனைவி வளர்மதி இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இதனை பிரித்து தர கேட்டு பலமுறை 2-வது மகன் ரத்தினவேல் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரத்தினவேல் தனது தாய் வளர்மதியிடம் சென்று சொத்தை பிரித்து தர கேட்டு தகராறு செய்துள்ளார்.
மேலும் 3-வது மகன் சக்திவேல் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்காக மரம், பலகை உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். அதன் மீது மண்எண்ணையை ஊற்றிய ரத்தினவேலு அதற்கு தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். அது முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. அதனை தடுக்க முயன்ற தாய் வளர்மதியை ரத்தினவேல் தாக்கி உள்ளார்.இது குறித்து பெரும்பாலைபோலீஸ் நிலையத்தில் வளர்மதி கொடுத்த புகாரை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டனர். பின்னர் நேற்று ரத்தின வேலை போலீசார் நேற்று கைது செய்தனர்.