தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் தந்தை இறந்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் வேம்பு என்பவர் மகன் ராம்சங்கர் (வயது 29). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.
இந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேம்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தந்தை இறந்ததில் இருந்து ராம்சங்கர் மனம் உடைந்து, மனஉளைச்சலுக்கு உள்ளானார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ராம்சங்கரின் தாயார் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். ராம்சங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்த தாயார் மகனை எழுப்ப அறைக்கு சென்றார். அப்போது ராம்சங்கர் மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராம்சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.