தெற்கு ரயில்வே வார விழா - மதுரை கோட்ட ஊழியர்களுக்கு விருது
சென்னையில் நடந்த தெற்கு ரயில்வே வார விழாவில் சிறப்பாக பணியாற்றிய மதுரை கோட்ட ரயில்வேயின் பல்வேறு பிரிவுகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு கேடயங்கள் வழங்கப்பட்டன.
இந்தியாவில் 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி பம்பாய் - தானே இடையே முதல் ரயில் போக்குவரத்து துவக்கி வைக்கப்பட்டது. இதை நினைவு கூறும் விதமாக வருடம் தோறும் ரயில்வே வார விழா கொண்டாடப்படுகிறது.
தெற்கு ரயில்வேயின் இந்த வருடத்திற்கான ரயில்வே வார விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9) அன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய மற்றும் சாதனைகள் புரிந்த ஊழியர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை கோட்டத்தைச் சேர்ந்த ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் சிவகாசி சுபா, பொறியாளர் செல்வ சாஸ்தா, கட்டுமான பிரிவு பொறியாளர் பாலசுப்பிரமணியன், தொலைத் தொடர்பு பொறியாளர் தென்காசி கணேஷ் குமார், ரயில் இயக்க ஊழியர் கூடல் நகர் அந்தோணி ஆரோக்கிய சகாயராஜ், ரயில் இயக்க கட்டுப்பாட்டு அலுவலர் குளத்து, பயணச்சீட்டு அலுவலர் கார்த்திக், ரயில்வே பாதுகாப்பு படை அமைச்சுப் பணியாளர் முருகேசன், ஊழியர் நல ஆய்வாளர் பிரபாகரன், பொதுப் பிரிவு அலுவலக கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ண பாரதி ஆகியோருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
சிறப்பாக செயல்பட்ட மதுரை கோட்ட அலுவல் மொழி பிரிவு, தொலைத்தொடர்பு பிரிவு, ரயில்வே மருத்துவமனை ஆகியவற்றிற்கு சுழற் கேடயங்கள் வழங்கப்பட்டன. இந்த சுழற் கேடயங்களை மதுரை கோட்ட அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன், முதுநிலை கோட்ட தொலைதொடர்பு பொறியாளர் ராம் பிரசாத், ரயில்வே மருத்துவ கண்காணிப்பாளர் பிரியா சவுதினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விருதுகள் பெற்ற ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பாராட்டு தெரிவித்தார்.