பரமத்தி வேலூர் சோதனை சாவடியில் எஸ்பி ஆய்வு
பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே வாகன சோதனை பணிகளை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து சோதனையில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு அறிவரைகள் வழங்கினார்.
மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் 16 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து பறக்கும்படையில்,நிலையான கண்காணிப்பு குழுவினர், காவல் துறையினர், விடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
. இந்த பணிகளை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன் ஆகியோர் அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி சோதனையில் ஈடுபடுகின்றனரா என ஆய்வு செய்து வருகின்றனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்ட நுழைவு வாயில் பகுதியான வேலூர் காவிரி பாலம் அருகே சோதனை சாவடி பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகன சோதனையில் போது போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் வாகனங்களை ஆய்வு செய்ய தடுப்புகளை மாற்றி அமைத்தார்.
பின்னர் வாகனங்களை சோதனை செய்வதற்கு போதிய விளக்குகள் அமைக்கவும், ஆய்வின் போது மதுபானங்கள், ஆயுதங்கள், குட்கா பொருட்கள் கொண்டு செல்கின்றனரா, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்கின்றனரா என்பது உள்ளிட்ட சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆனந்தராஜ், விஜயகுமார், இமயவரம்பன், சங்கீதா, வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.