பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணிக்க சிறப்புக்குழு
நாமக்கல் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு பணிகளை கண்காணிக்க 47 அதிவிரைவுப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் உமா கூறினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா தலைமையில் வருவாய்த்துறை, கால்நடை மற்றும் பராமரிப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடனான பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் ... அண்டை மாநிலமான கேரளா மாநிலம் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணையாளர்களை பண்ணையின் நுழைவு வாயிலில் Footpath அமைத்து அதில் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி கலவை கலந்து வைக்க வேண்டும். மேலும், உரிய உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 47 அதிவிரைவுப்படை (RRT Team) கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு கோழிப்பண்ணைகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோழிப்பண்ணைக்குள் நுழையும் மற்றும் வெளிசெல்லும் அனைத்து வாகனங்களையும் கிருமி நாசினி கொண்டு கோழிப்பண்ணையாளர்கள் சுத்தம் செய்திட வேண்டும். அனைத்து கோழிப்பண்ணைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவும், வழக்கத்திற்கு மாறாக பண்ணைகளில் அசாதாரண இறப்பு ஏற்படின் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழி மற்றும் கோழியினப்பொருட்கள் போக்குவரத்தினை அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவும், நீர் இருப்பு பகுதிகளில் ஏற்படும் அசாதாரணமான இறப்புகளை உடனுக்குடன் கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
கோழிப்பண்ணைகளில் உயிரி பாதுகாப்பு (Bio-Security) முறைகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கே.சாந்தா அருள்மொழி, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர். ம.செல்வராஜு, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மருத்துவர்.சி.நாராயணன், கோழிப்பண்ணை உரிமையாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.