கன்னியாகுமரி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பு பேட்டி
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க கட்டுபாட்டு அறை தொடங்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நடத்தப்படவுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இதையொட்டி இன்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஸ்ரீதர் இன்று கலெக்டர் அரங்கில் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 310 வாக்குச்சாவடி மையங்கள், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 275 வாக்குச்சாவடி மையங்கள், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குசாவடி மையங்கள், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 273 வாக்குசாவடி மையங்கள், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 272 வாக்குசாவடி மையங்கள், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 268 என வாக்குசாவடி மையங்கள் என மொத்தம் 1698 வாக்குசாவடி மையங்கள் அமைக்கபடவுள்ளது.
மாவட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுதேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள கட்டுப்பாட்டு கருவி 3406, வாக்குப்பதிவு கருவி 4937 விவி பேட் கருவி 2254 ஆகியவை முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவுற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கிட்டங்கியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை பொதுதேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் 1800-599-8010 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தேர்தல் ஆணையத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள C-VIGIL APP மூலமாகவும் புகார் அளிக்கலாம். இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ் பி சுந்தர வதனம், மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் பயிற்சி ரஜத் பீட்டன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.