பெரம்பலூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 30.06.2024 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் 30.06.2024 அன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தகவல். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 30.06.2024 அன்று 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லத் திட்டம் குறித்து 121 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு 2024-2025 ஆம் ஆண்டிற்கு ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லத் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதித்து பயனாளிகளை தேர்வு செய்தல் வேண்டும்.
1. ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம் – 2024-2025 2. கலைஞரின் கனவு இல்லத் திட்டம் – 2024-2025 சிறப்பு கிராம சபை தினமான 30.06.2024 அன்று கிராம சபை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிறப்பு கிராம சபைக் கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு கிராம சபை தினமான 30.06.2024 அன்று கிராம சபைக் கூட்டத்தில் கிராம வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.