அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றம்
திருச்சுழியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலை அம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திருச்சுழி அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் கோவில் பங்குனித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி இன்று முதல் 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி சன்னதிக்கு முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, யாகசாலை வேள்வி பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த பங்குனித்திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் திருச்சுழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மேலும், ஒவ்வொரு நாளும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளனர். இதனையடுத்து வரும் மார்ச் 22ம் தேதி திருக்கல்யாண வைபவமும், மார்ச் 23ம் தேதி மஹா திருத் தேரோட்டமும் நடைபெற உள்ளது. இதற்காக, இன்று நடைபெற்ற கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீதிருமேனிநாதர் மற்றும் துணைமாலை அம்மனைத் தரிசனம் செய்தனர்.