புழுதி பறக்கும் சாலை - வாகன ஓட்டிகள் அவதி
உத்திரமேரூர் அருகே குவாரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள சாலைகளில் புழுதி பறப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுார், சிறுமையிலுார், சித்தாலப்பாக்கம், சிறுதாமூர், பொற்பந்தல், உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல் குவாரிகள், கிரஷர் மற்றும் எம்.சாண்ட் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இத்தொழிற்சாலைகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், அருங்குன்றம், பட்டா, பழவேரி உள்ளிட்ட கிராம சாலைகள் வழியாக இயங்குகின்றன.
இரவு, பகலாக தொடர்ந்து இயங்கும் இந்த லாரிகளால், மதுார், பட்டா, அருங்குன்றம், பழவேரி உள்ளிட்ட சாலைகளில் எப்போதும் மண் புழுதி பறந்த வண்ணம் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டு தினசரி பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில் பறக்கும் மண் புழுதியை கட்டுப்படுத்த சாலைகளில் லாரி வாயிலாக தண்ணீர் ஊற்றும் நடவடிக்கை தொழிற்சாலை நிர்வாகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மண்புழுதி பறப்பதை கட்டுப்படுத்த சாலைகளில் தண்ணீர் ஊற்றுவதையே தீர்வாக கொண்டுள்ளனர். இதனால், சாலைகள் சேதமாகி இச்சாலைகளில் பள்ளங்கள் ஏற்படுகின்றன. மேலும், தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், சாலையில் தண்ணீர் ஊற்றிய ஒரு மணி நேரத்தில், காய்ந்து மீண்டும் புழுதி பறக்க துவங்கி விடுகிறது. எனவே, இப்பகுதி சாலைகளில் தண்ணீர் ஊற்றும் நடவடிக்கைக்கு மாறாக நிரந்தர தீர்வு காணும் வகையிலான நடவடிக்கை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.